காய்ச்சல்

உனக்குக் காய்ச்சல்..
கொதித்துக் கிடக்கிறது மனசு..
பாபர் ஹுமாயூனின்
நோவை வாங்கியதாய்...
உன்னிடமிருந்து இடம்பெயர்ந்து
எனக்கு வரட்டும்..


அணைத்து ஆரத்தழுவி.,
சூடெல்லாம் உருவிப்போட
நினைக்கிறேன்..
சூ மந்திரக் காளியென..


நீ பிதற்றும் போதெல்லாம்
பதைக்கிறது மனசு..
சூப்பும் பார்லிக் கஞ்சியும்
ரொட்டியும் ஹார்லிக்ஸும்
ஆறிக் காய்ந்து போய்..


உணர்வற்று ஒரு நேரம் கூட
கண் சொருக முடியாமல்..
உற்று உன்னைப் பார்த்துக் கொண்டே...
பக்கம் அமர்ந்து நெற்றி
தடவிக் கொண்டே....


கண்விழித்து மருந்து உண்ணவாவது
ஒரு வாய் சாப்பிடு..
கசந்து கிடக்கிறது உனக்கு நாவு..
எனக்கு எல்லாம்..


உன் நோவிலெல்லாம்
உன்னைப் பார்த்துப் பார்த்தே
சுமந்துகொண்டே கவலையால்
குலைந்து இருக்கிறேன் நானும்..


இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு..


விடியலில் சூரியன் விரியப் பூத்த
ஒரு உயிர்ப்பான நாளில்
இயல்பான கதகதப்புடன்
பல்துலக்கி காபி அருந்துகிறாய்,,
பார்த்துப் பரவசத்தில் நான்..

0 comments:

Post a Comment