எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..

வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..

நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...

குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
குழம்புதய்யா என் மனசு..
சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..

வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...
வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?

வெளி வேலை., வங்கி வேலை .,
பள்ளிவேலை., பாட வேலை
எந்த வேலை செய்தாலும்
எந்துணையே நீ இல்லை........
கை கொடுத்த தெய்வமே...
என்னை கையோட அழைச்சுப்போ...

கஷ்டப்பட்டு நீ உழைக்க
உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...
சொந்த வீடு., காரினிலே
என்னை சுகமாக இருக்க வச்சே..

உலகத்து வசதியெல்லாம்
பிள்ளைகளுக்கு செஞ்சு வச்சே...
அம்மா., அப்பா .,அண்ணன் .,தம்பி .,
மாமா., மாமி எல்லோரும் என்னோட...

என்னைக் கைப்பிடித்த கருணையே
என் கைபிடிக்குள் எப்ப வருவ........???

அம்மா…

ஒவ்வொரு முறையும்
அகண்ட பிரபஞ்சத்தை
அவள் கண்களில் பார்க்கிறேன்...

விடுதியிலோ.,
மணமுடித்தோ,
வெளிநாட்டில் வேலையிலோ..

எங்கிருந்தாலும்
வருகிறாள் முடிந்துகொண்டு
குசேலனின் அவலாய் அன்பை...

வாசனை வீசும் சொற்களுக்குச்
சொந்தக்காரியல்ல...
அநேகமாகக் காரம்தான்...
வைய வைய வைரக்கல்...

சிறுவயதில் கோழியைப்போல்
அவ்வப்போது முடிபற்றி மிதிப்பாள்..
இப்போது வார்த்தைகளால்...

சிலசமயம் புரிந்து கொள்ளாமல்...
சில சமயம் கொடுந்தவறுக்காய்...

அவள் புன்னைகைத்தால்
காலடியில் முயலகனாய்...
என்றென்றும் மயங்கி...

அவளுக்குப் பிடிக்குமென
பலதும் செய்து அவளை
அவதியுற வைத்திருக்கிறேன்...
சமையலாகட்டும்...
செயல்களாகட்டும்...

உதிரத்தில் உருவாக்கி.,
உருவாய் செதுக்கியவளே.,
உன்னோடு கிடந்தே
உழன்று கிடப்பேன் என்று
அவ்வப்போது ஒதுக்கி வைத்து
ஒளிந்து கொள்கிறாயா...?

என் தேவையறிந்து
பசியறிந்து.,
ருசியறிந்து.,
வயசறிந்து.,
நிறைவேற்றியவளே...

செல்லமாக வேண்டாம்...
கோபமாக வேணும் உன் குரலை
சிந்திச்செல் அவ்வப்போது...

காய்ச்சல்

உனக்குக் காய்ச்சல்..
கொதித்துக் கிடக்கிறது மனசு..
பாபர் ஹுமாயூனின்
நோவை வாங்கியதாய்...
உன்னிடமிருந்து இடம்பெயர்ந்து
எனக்கு வரட்டும்..


அணைத்து ஆரத்தழுவி.,
சூடெல்லாம் உருவிப்போட
நினைக்கிறேன்..
சூ மந்திரக் காளியென..


நீ பிதற்றும் போதெல்லாம்
பதைக்கிறது மனசு..
சூப்பும் பார்லிக் கஞ்சியும்
ரொட்டியும் ஹார்லிக்ஸும்
ஆறிக் காய்ந்து போய்..


உணர்வற்று ஒரு நேரம் கூட
கண் சொருக முடியாமல்..
உற்று உன்னைப் பார்த்துக் கொண்டே...
பக்கம் அமர்ந்து நெற்றி
தடவிக் கொண்டே....


கண்விழித்து மருந்து உண்ணவாவது
ஒரு வாய் சாப்பிடு..
கசந்து கிடக்கிறது உனக்கு நாவு..
எனக்கு எல்லாம்..


உன் நோவிலெல்லாம்
உன்னைப் பார்த்துப் பார்த்தே
சுமந்துகொண்டே கவலையால்
குலைந்து இருக்கிறேன் நானும்..


இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு..


விடியலில் சூரியன் விரியப் பூத்த
ஒரு உயிர்ப்பான நாளில்
இயல்பான கதகதப்புடன்
பல்துலக்கி காபி அருந்துகிறாய்,,
பார்த்துப் பரவசத்தில் நான்..

பிறப்பின் வருவது…

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவிஞர் கண்ணதாசன்